திருப்பூர்:சபரிமலை சீசன் துவங்கிய நிலையிலும், ரயில் டிக்கெட் முன்பதிவு மந்தமாக உள்ளது.கொரோனா பரவலால், சபரிமலையில், பக்தர்கள் வந்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை சான்று பெற்றவர்களே, கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும், ரயிலில் சபரிமலைக்கு பக்தர்கள் பயணிப்பது வெகுவாக குறைந்துள்ளது.ரயில்வே முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,'சபரிமலை சீசன் துவங்கினால், கோவையை கடந்து கேரளாவுக்குள் நுழையும், 80 சதவீத ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு 'பிசி'யாகிவிடும். வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில், மூன்று மாதம் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து விடுவர்; காத்திருப்போர் பட்டியலில் ஏராளமானோர் இருப்பர். தற்போது வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு ரயில் இயக்கப்பட்ட போதும், முன்பதிவு வழக்கமான அளவு இல்லை' என்றனர்.