ஓமலூர்: ''மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர் முதல்வர்,'' என, எம்.பி., கனிமொழி பேசினார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி வந்த, தி.மு.க., மாநில மகளிர் அணி செயலர், எம்.பி., கனிமொழிக்கு, நெசவாளர்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நெசவாளர்கள் வீடுகளுக்கு சென்று, தொழிலின் தற்போதைய நிலை, பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, வனவாசியில், நெசவாளர்கள், மக்களிடம் கலந்துரையாடலுக்கு பின், கனிமொழி பேசியதாவது: பழனிசாமி அமைச்சராகும் முன், இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார். அமைச்சரான பின்பும் கூட செய்யவில்லை. நங்கவள்ளியில், நூற்பாலை, அரசு கலைக்கல்லூரி, தொகுப்பு வீடுகள் கட்டிதரப்படும் என, தேர்தல் வாக்குறுதியில் சொன்னார். ஆனால், மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றி தராத முதல்வராக உள்ளார். மத்திய அரசு, மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரும்போது, அதை தடுக்க, தைரியமற்ற பழனிசாமியாக உள்ளார். நெசவாளர்களுக்கு, சங்கம் அமைத்தல், கூடுதல் மின் சலுகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்து, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.