சேலம்: ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலையால், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். சேலம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து, தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். கொண்டலாம்பட்டி, சீல்நாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் இருந்து, நோயாளிகளை அழைத்து வரும் அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், குகை, திருச்சி பிரதான சாலை, மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள பழைய மார்க்கெட் சாலை வழியாக, மருத்துவமனைக்கு வருகின்றன. தினமும், 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வந்து செல்லும் முக்கிய சாலையான, பழைய மார்க்கெட் சாலை, அப்ஸரா பாலம் இருபுறமும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. ஆறு மாதத்துக்கு மேலாகியும், இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், கனரக வாகனங்கள் செல்லும் போது பறக்கும் புழுதியால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதிகாரிகள், இச்சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.