கொளத்தூர்: ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் இல்லாததால், குரும்பனூர் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். கொளத்தூர், ஆலமரத்துப்பட்டி, குரும்பனூரில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, தினமும் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால், குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், ஒரு வாரமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, ஆலமரத்துப்பட்டி ஊராட்சி தலைவர் வில்வராணி முருகன் கூறுகையில், ''இதுபோன்ற அடிப்படை பிரச்னையை தீர்க்க, சமீபகாலமாக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஊராட்சியில் நிதி இல்லாததால், அடைப்பை கண்டுபிடித்து நீக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.