ஓசூர்: ஓசூர், அதியமான் கல்லூரி எதிரே, சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சங்க தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் சம்பத், புதிய அலுவலக கட்டத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், டான்சியா சங்க தலைவர் அன்புராஜன், இணை செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் பேசினர். விழாவில், தொழில்முனைவோருக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். ஓசூரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும். உதான் திட்டத்தில் விமான சேவையை துவங்க வேண்டும். ஓசூர் - ஜோலார்பேட்டை இடையே, ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். கர்நாடகா மாநில மெட்ரோ ரயில் சேவையை, ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர, அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், ஹோஸ்டியா சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் ஸ்ரீதரன், கட்டட பணிக்குழு தலைவர் ரமணி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.