கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று வினாடிக்கு, 760 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 682 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 760 கன அடியாக அதிகரித்தது. அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.10 அடியாக நீர்மட்டம் இருந்தது. நீர்மட்டம், 50 அடிக்கு மேல் உள்ளதால், நீர்வரத்தை பொறுத்தும், அணை பாதுகாப்பு கருதியும், எந்த ?நேரத்திலும், அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, கரையோரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்கவும், இரவில் ஆற்றை கடக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, ஓசூரில், 11 மி.மீ., கிருஷ்ணகிரியில், 7 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.