ஓசூர்: ''தேசிய அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது,'' என, தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) அலுவலக கட்டடத்தை, அவர் திறந்து வைத்து பேசியதாவது: தமிழகத்தில் ஒற்றை சாளர முறையால், தொழில் துறை வலிமை பெற்றுள்ளது. இந்திய தொழில் வர்த்தக மேம்பாட்டு மைய ரேங்கில், 14வது இடத்தில் தமிழகம் உள்ளது. குருபரப்பள்ளியில், 3,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள டெல்டா நிறுவனத்தில், 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்து, மொபைல்போன் தயாரிப்பில் தமிழகத்தை, உலகின் முதல், 10 இடத்துக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளோம். மத்திய, மாநில அரசு உதவியுடன், மதுரையில் வர்த்தக மையம் உருவாக்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் கூட தமிழகத்தில், 55 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதனால், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு, 74 ஆயிரம் இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மஹாராஷ்டிரா மாநிலத்தை பின்னுக்கு தள்ளி, தேசிய அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.