சேலம்: கார் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில், கார்கள் உள்பட, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
சேலம், அமானி கொண்டலாம்பட்டி அருகே, காட்டூர், ஆட்டோ நகரை சேர்ந்தவர் தனபால், 39; இவரது கார் பட்டறையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவி, அருகிலிருந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான கார் பட்டறைக்கும் பரவியது. இதில் பழுது பார்ப்பு பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'ஸ்கார்பியோ' கார், டயர்கள் தீப்பிடித்து எரிந்தன. சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், இரு கார், 50க்கும் மேற்பட்ட டயர்கள், லாரி, கார் உதிரி பாகங்கள் உள்பட, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக தெரிகிறது. கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.