கரூர்: கரூர் நகராட்சி பகுதியில், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்த நிலையில் உள்ளன. மழை பெய்து வருவதால், பாதாள சாக்கடை மூடி உள்ள இடங்களில், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
கடந்த, 2011ல், விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்கள், பாதாள சாக்கடை திட்ட ராட்சத குழாய்களில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்யும் விதத்தில், வட்ட வடிவில் மேல் பகுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் மேல், சிமென்ட் மூடி வைக்கப்பட்டுள்ளது. மூடிகள் மீது பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால், நகரின் பல இடங்களில் உடைந்துள்ளன. அதை, உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரி செய்வது இல்லை. குறிப்பாக, ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து, கழிவு நீர் பல நாட்களாக சாலையில் சென்றது. சில நாட்களுக்கு பிறகு, சரி செய்யப்பட்டது. கரூர் நகர பகுதிகளில் கடந்த, மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் கவன குறைவால், உடைந்த பாதாள சாக்கடை மூடி மீது சென்று, கீழே விழ வாய்ப்புள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், உடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மாற்ற வேண்டியது அவசியம்.