காரியாபட்டி : கட்டுக்குத்தகை கரிசல்குளம் கண்மாய் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் மாயமானதால் தற்போதைய மழையில் தண்ணீர் வர வழியின்றி போனது. இதன் காரணமாக காரியாபட்டி சுற்றுப்பகுதிகளில் 800 அடியிலும் நிலத்தடி நீர் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது.
காரியாபட்டியில் குடிநீர் நீராதாரமே கட்டுக் குத்தகை கரிசல்குளம் கண்மாய்தான். பல்வேறு திசைகளில் இருந்து இங்கு வந்த வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் இக்கண்மாய்க்கு தண்ணீர் வரத்து என்பதும் கேள்விக்குறியாகி விட்டது. இதன் விளைவு காரியாபட்டி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 120 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர் தற்போது 800 அடி ஆழத்தில் துளையிட்டும் கிடைக்கவில்லை.
நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதன் உண்மை தெரிந்தும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கால்வாய் ஆக்கிரமிப்ஈகளை அகற்றி தூர்வார முன்வரவில்லை. சமீபத்தில் பெய்த பருவ மழைக்கு பல்வேறு கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்தது. கட்டுக்குத்தகை கரிசல்குளம் கண்மாய்க்கு சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதற்கான வரத்து ஓடைகளில் தண்ணீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நின்றது.
காரியாபட்டி பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது கரிசல்குளம் கண்மாய்தான். கண்மாய்க்கு மழை நீர் வரத்து இல்லாமல் போனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் என்பதில் சந்தேகமில்லை.