ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ,வத்திராயிருப்பு பகுதியின் பல்வேறு வழித்தடங்களில் மூவர் பயணிக்கும் ஆட்டோக்களில் விபரீதம் தெரியாமல் விவசாயத்தொழிலாளர்கள் 12 பேர் வரை பயணிக்கின்றனர். இதை முறைப்படுத்தவேண்டிய போலீசார், போக்குவரத்து துறை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது.
கொரோனாவால் இன்னும் முழுஅளவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நகர்ப்பகுதியில் மட்டுமே அதிகளவில் பஸ்கள் இயங்கும்நிலையில் கிராமம், சேய்கிராமங்களுக்கு வழக்கமாக இயங்கும் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் அந்த கிராம விவசாய கூலித்தொழிலாளர்கள் தங்களின் அன்றாட பணிகளுக்காக ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து மம்சாபுரம், செண்பகதோப்பு, நீதிமன்றம், வத்திராயிருப்பிலிருந்து சுற்றுக் கிராமங்களில் இத்தகைய நிலை காணப்படுகிறது.போக்குவரத்து துறை விதிப்படி 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டிய ஆட்டோவில் டிரைவரின் இருபுறமும் இருவர் பின்புறம் 3 அங்கீகரிக்கபட்ட சீட்டில் 4 , லக்கேஜ் வைக்கும் இடத்தில் 3 பேர் என 12 பேர் வரை பயணிக்கின்றனர்.
கண்மாய்கரைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டிய போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் அலட்சிய போக்குடன் உள்ளனர். விபரீதங்கள் நிகழும் முன் விழிப்புணர்வு நடவடிக்கை அவசியம்.