விருதுநகர் : விருதுநகரில் அமையும் மருத்துவ கல்லுாரியில் தீக்காய பிரிவை ஏற்படுத்த சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உரிமம் பெற்ற 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் நேரடியாக , மறைமுகமாகவும் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தீ விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. தீக்காயமடைவோர் சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிறப்பு பிரிவில் சேர்க்கப்படுகின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவு இல்லை. உயிருக்கு போராடுபவர்களை சிவகாசி, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. நீண்ட துாரம் பயணம், அலைச்சல், நேர விரயம் ஏற்படுகிறது. இதனால் பல சந்தர்ப்பங்களில் காயமடைந்தோரை பிழைக்க வைக்க இயலாமல் போகிறது.
விருதுநகரில் நவீன வசதிகளுடன் அமையும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும். இதற்கு சுகாதார துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும்.