சாத்தூர் : விருதுநகர் மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட்களில் விற்பனை செய்யப்பட்ட அம்மா குடிநீர் பாட்டில்கள் எங்கும் கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் ஸ்டாண்ட்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது .கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது .இதனால் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன .தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது .
பஸ்ஸ்டாண்ட்களில் உள்ளாட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளும் பராமரிக்கப்படாததால் பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது . கடைக்காரர்கள் தொட்டியில் நிரப்பப்படும் தண்ணீரை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வதால் இத்தொட்டி எப்போதும் காலியாகவே உள்ளது.
இதனால் பயணிகள் கடைகளில் உள்ள குடிநீர் பாட்டில்களை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது . இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு பயணிகள் குடிநீருக்காக அல்லல்படும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு பஸ்ஸ்டாண்டில் பூட்டிக்கிடக்கும் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
போலி மினரல் வாட்டர்
பஸ்களில் பயணம் செய்யும்போது போலியான மினரல் வாட்டர் பாக்கெட்டுகளை வியாபாரிகள் விற்று விடுகின்றனர் .இவற்றை வாங்கி பருகும் பயணிகள் உடல் நல பாதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. பயணிகள் நலன் கருதி அம்மா குடிநீர் விற்பனையை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-முனியசாமி, சமூக ஆர்வலர் ,சாத்துார்