ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் ரூ.2.50 கோடியில் அமைத்த மீன்துறை அலுவலக கட்டுமான பணி நிறைவு பெறாமல், கிடப்பில் உள்ளது.
ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் 1100 விசை, நாட்டுப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கின்றனர். இப்படகிற்கு இங்குள்ள மீன்துறை உதவி இயக்குனர் மூலம் மானிய டீசல், மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்படுகிறது.மேலும் இப்படகுகள் தடை மீறி இரட்டைமடி, சுருக்குமடியில் மீன்பிடிப்பதை தடுத்து, மீன்வளத்தை பாதுகாக்க 10க்கு மேலான மீன்துறை இன்ஸ்பெக்டர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
ஆனால் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் நிரந்தர கட்டடம் இன்றி, தற்போது தாசில்தார் அலுவலகம் முதல்மாடியில் இயங்குகிறது.இந்நிலையில் ராமேஸ்வரம் ஓலைக்குடா சங்குமால் கடற்கரை அருகில் ஓராண்டுக்கு முன் ரூ.2.50 கோடியில் உதவி இயக்குனர் அலுவலகம், ஆய்வு மாளிகை கட்டுமானம் துவங்கியது.
தற்போது 90 சதவீத பணி முடிந்தும், மீதமுள்ள பர்னிச்சர், மின்சாதன பொருட்கள் பொருத்தாமல் மீன்துறை அதிகாரிகள்அலட்சியமாக உள்ளதால், புதிய அலுவலகம் திறக்க இன்னும் சிலமாதம் நீடிக்கும் நிலை உள்ளது.