திண்டுக்கல் : '90 சதவீத மானியத்தில் விதை வெங்காயம் வழங்க வேண்டும்' என, ஆன்லைன் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கொரோனாவால் 6 மாதங்களுக்கு பின் ஆன்லைனில் திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்தவாறு ஆன்லைன் வழியே விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை தெரியப்படுத்தினர். கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் சுருளியப்பன், நேர்முக உதவியாளர் ரவிபாரதி, துணை இயக்குனர் பெருமாள்சாமி பங்கேற்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மழையின்றி பயிர்கள் வாடியதால் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பயிர்களுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை வெங்காயம் விலை உச்சத்தில் உள்ளது. அதனால் 90 சதவீத மானியத்தில் விதை வெங்காயம் வழங்க வேண்டும். அம்மை நோயில் இருந்து கால்நடைகளை காக்க தடுப்பூசி போட வேண்டும். விளை நிலங்களுக்குள் புகும் வன விலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.