திருப்பூர்:வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ள மையத் தடுப்பை அகற்ற வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர், தாராபுரம் ரோட்டில் இருந்து அய்யம்பாளையம் பிரிவு வழியாக, அபிராமி நகர், மும்மூர்த்தி நகர், சபரி நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். அரசு பஸ், மினி பஸ், டூவீலர் என, வாகன போக்குவரத்தும் இருந்து வருகிறது.அதிகரித்த போக்குவரத்தால், நேற்று முன்தினம் இரவு கே.செட்டிபாளையம், அய்யம்பாளையம் பிரிவில் தாராபுரம் ரோட்டின் 'பேரிகார்டு' மூலம், மையத் தடுப்பு ஏற்படுத்தினர். இதனால், ஒரு கி.மீ., வரை சென்று சுற்றி வருவதாக கூறி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்காக, நேற்று காலை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மையத் தடுப்பை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற ரூரல் போலீசார் மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் பேச்சு நடத்தினர். அரை மணி நேரத்துக்கு பின், 'பேரிகார்டு' அகற்றப்பட்டது. அதனால், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.