திண்டுக்கல் : ''சிறார் நீதி அமைப்பு இளம் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறது'' என, மாவட்ட நீதிபதி ஜமுனா தெரிவித்துள்ளார்
திண்டுக்கல்லில் போலீசாருக்கு சிறார் நீதி அமைப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா, டி.ஐ.ஜி., முத்துச்சாமி, எஸ்.பி., ரவளிபிரியா பங்கேற்றனர். குழந்தைகள் வழக்கில் கடைபிடிக்க வேண்டிய குறிப்பேடுகள் போலீசாருக்கு வழங்கப்பட்டது.நீதிபதி ஜமுனா பேசியதாவது: குற்றவழக்குகளில் தண்டனை பெறும் சிறுவர்கள், பெரியோர்களின் மனநிலை வேறுபாடுடன் உள்ளதை அறிந்த பின்பே சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.
தவறு செய்யும் இளம் குற்றவாளிகளுக்கு சிறார் நீதி அமைப்பு மறுவாழ்வு அளிக்கிறது என்றே கூறலாம்.குழந்தைகள் குடும்பச் சூழல், வறுமை, சமூக கட்டமைப்பு காரணங்களால் தெரியாமல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு அவர்களை கவனமாக கையாண்டு நல்வழிப்படுத்த வேண்டும், என்றார்.
டி.ஐ.ஜி.,முத்துச்சாமி பேசியதாவது: குற்றவாளி குழந்தைகளின் 2ம் தாய் போலீசார். அவர்கள் நல்வழிப்படுவதும், குற்றவாளிகளாக தொடர்வதும் போலீசார் கையில் உள்ளது. குழந்தைகள் குறித்த வழக்குகளில் முடிவுகளை, மூளையிலிருந்து எடுக்காமல், மனதிலிருந்து எடுங்கள். தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும், என்றார்.