திண்டுக்கல்லில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் குடும்பத் தகராறு, வேலையின்மை, பொது முடக்கத்தால் மன உளைச்சல் போன்ற காரணங்களால் பலர் தற்கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்த வழக்குகள் அந்தந்த பகுதி ஸ்டேஷன்களில் பதிவாகின்றன. மாவட்டம் முழுவதும் 35 க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் இதுவரை 1200 க்கும் மேற்பட்ட தற்கொலை வழக்குகள் பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருந்தன.இவ்வழக்குகளில், பிரேத பரிசோதனை சான்றிதழ் வராமலிருத்தல், இறுதி அறிக்கை முடிக்காமலிருந்தல், ரசாயன பரிசோதனை முடிவுக்கு காத்திருத்தல் என பல்வேறு சூழல்களால் வழக்குகள் முடிவுக்கு வராமல் இருந்தன.
நாளுக்கு நாள் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும், வழக்கின் தொடர்ச்சியும் நீண்டு கொண்டே செல்கிறது. இதனை தவிர்க்க எஸ்.பி., ரவளிபிரியா வழக்குகளை ஆய்வு செய்து துரிதமாக முடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அந்தந்த பகுதி போலீசார் சிலர் பொறுப்பெடுத்து தனிக்கவனம் செலுத்தினர். இதனால் கடந்த அக்டோபரில் 900 தற்கொலை வழக்குகள் இருந்த நிலைமாறி, தற்போது 120 வழக்குகளே நிலுவையில் உள்ளன.