வால்பாறை:வால்பாறை அருகே, பெட்டிக்கடையை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், காட்டு யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட காட்டுயானைகள், காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தன.அங்குள்ள பெட்டிக்கடை மற்றும் ரேஷன் கடைகளை இடித்து, பொருட்களை வெளியே இழுத்து சேதப்படுத்தின. தகவல் அறிந்து, வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில், வனவர் முனியாண்டி மற்றும் வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானைகளை விரட்டினர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்க கூடாது. தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில், பொருட்களை இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.