உடுமலை:மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தும் விதமாக, கல்வி இணை செயல்பாடுகளுக்கும் அரசுப்பள்ளிகள் முக்கியத்துவம் அளிக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அரசுப்பள்ளிகளில், கல்வித்தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி, கல்வி கற்பித்தலில் மாற்றம், எளிமையான கற்றல் மற்றும் கற்பித்தல் என, பல்வேறு செயல்பாடுகளை கல்வித்துறை பின்பற்றி வருகிறது.இருப்பினும், கல்வித்தரத்தில் மாணவர்கள் மேம்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டே இவை அனைத்தும் உள்ளது. கல்வியைக் கடந்து மாணவர்களுக்கு, எதிர்காலத்தை கற்றுக்கொடுக்கக் கூடிய இணைசெயல்பாடுகளுக்கு, பள்ளிகளில் இடம் குறைந்து விட்டது.துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், இதுபோன்ற செயல்பாடுகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாகிறது. உடுமலை சுற்றுப்பகுதியில், ஒரு சில பள்ளிகளில், மட்டுமே இணைசெயல்பாடுகள் நடைமுறையில் இருக்கிறது.தற்போது, 'ஆன்லைன்' வழியாகவே பாடம் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் பள்ளிக்கு வரும் சமயத்தில், அவர்களுக்கு பாடப்புத்தக கல்வியோடு, தனித்திறன்களை வெளிப்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும்.இணைசெயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிகளிலும் முக்கியத்துவம் அளிப்பதோடு, மாணவர்களையும் அதில் ஈடுபடுத்த ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.