உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், மாவட்ட எல்லையில் பசுமை அதிகரிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், உடுமலை பகுதியில், இந்தாண்டு மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று, மாவட்ட எல்லையான கோமங்கலம் பகுதியில், அன்பு கரங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில், தேக்கு, இலுப்பை, புன்னை, கடம்பை, தென்னை, சவுக்கு என, 730 மரக்கன்றுகள் நடப்பட்டன.இந்நிகழ்ச்சியில், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், மழை உடுமலை, அன்பு கரங்கள், கிழக்கு அரிமா சங்கம், அபெக்ஸ் சங்கம் வாக்கர்ஸ் கிளப், அன்பகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதே போல், வீணாக உள்ள விவசாய நிலங்களின் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் மற்றும் பசுமை அதிகரிக்கும் வகையில், இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.அவ்வகையில், சிஞ்சுவாடி கிராமத்தில், விவசாயி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான நிலத்தில், கொய்யா, பலா, இலுப்பை, தான்றிக்காய், புளி, கடம்பை,குமிழ் ஆகிய நாட்டு மரங்களும், பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரின பெருக்கத்திற்கு உதவும் வகையில், பழ வகை மரங்களும் நடப்பட்டன.இத்திட்டத்தின் கீழ் மரக்கன்று நட விருப்பம் உள்ள விவசாயிகள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.