உடுமலை;சாம்பல் பூசணி கொள்முதல் விலை சரிந்துள்ளதால், நஷ்டம் ஏற்பட்டு, விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.உடுமலை மலையாண்டிக்கவுண்டனுார், பெரியகோட்டை, மருள்பட்டி, ஆண்டியக்கவுண்டனுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, சாம்பல் பூசணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.கேரளா வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்து வந்ததால், இவ்வகை பூசணி சாகுபடி பரப்பு அதிகரித்து வந்தது. இனிப்புகள், உணவு பொருட்களில் பயன்படுத்தப்படும் சாம்பல் பூசணிக்கு, கேரளாவில் அதிக தேவையுள்ளது. அதன்படி, நடப்பு பருவத்திலும், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், இது சாகுபடி செய்யப்பட்டது.புரட்டாசி பட்டத்தில், நடவு செய்யப்பட்ட பயிர்களிலிருந்து, காய்கள் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கேரளா வியாபாரிகளின் வருகை குறைந்து, தட்டுப்பாடு இல்லாததால் விலை சரிந்துள்ளது.உள்ளூர் சந்தையிலும், கொள்முதல் செய்ய ஆளில்லாத நிலை உருவாகியுள்ளது. தற்போது, சாம்பல் பூசணி, கிலோ, 2 ரூபாய்க்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுகிறது. கட்டுப்படியாகாத விலை காரணமாக, காய்களை அறுவடை செய்ய வழியில்லாமல் அவை செடிகளிலேயே விடப்பட்டுள்ளன.விவசாயிகள் கூறுகையில், 'சாம்பல் பூசணியிலிருந்து மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்து, வேளாண்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். நடப்பு சீசனில், ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'என்றனர்.