மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், பாதாள சாக்கடை திட்ட பணிகள், ஆமை வேகத்தில் நடக்கின்றன. அதனால் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், இரவில் வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.மேட்டுப்பாளையம் நகராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 92 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கின. ஒன்றரை ஆண்டுகளில், பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் முடிக்கவில்லை. நகரில் உள்ள, 33 வார்டுகளில், ஒரு சில வார்டுகளில் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள வார்டுகளில் பணிகள் முடிக்கவில்லை. 24வது வார்டில், கெண்டையூர் பிரதான சாலையில், குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் குழாய் பதிக்க குழிகள் தோண்டவில்லை. இப்பகுதியில் குழாய் பதிக்க, ராமேகவுண்டன்புதுார் சாலையில் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், மேலும் குழாய்கள் பதிக்க தோண்டிய குழிகளை, பல இடங்களில் சரியாக மூடாமல் விட்டு விட்டனர்.சில இடங்களில் சாலைகளில் நடுவே குழியும், பள்ளமும் உள்ளதால், இரவில் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பலர், குழிக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பாதாள சாக்கடை திட்ட பணிகளை கண்காணிக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், உடனடியாக பாதாள சாக்கடை திட்ட பணிகளை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.