அன்னுார்:'செய்யாத வேலைக்கு பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது' என, ஒன்றிய குழு கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது.அன்னுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், சேர்மன் அம்பாள் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, சிவகாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு, தினக்கூலி பணியாளர்களுக்கு, ஐந்து மாதங்களுக்கு சம்பளம் வழங்கிய வகையில், நான்கு லட்சத்து, 34 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது என தீர்மானம் வாசித்தபோது, கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.'தினக்கூலி பணியாளர்கள் எங்கு வேலை செய்தனர். என்ன வேலை செய்தனர் என எங்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து ஊராட்சியில் எதுவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. செய்யாத வேலைக்கு நிதி ஒதுக்கக்கூடாது' என்றனர்.அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து, கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர். பச்சாபாளையம் ஊராட்சியில், அரசூர் சாலை பிரிவு வரை ஒரு கி.மீ., துாரத்திற்கு, தனியார் நிறுவன பங்களிப்போடு, 1.85 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்துதல், ஊராட்சி ஒன்றிய வளாகத்திலுள்ள எட்டு அலுவலர் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிதாக கட்டடம் கட்டுதல், ஒன்றிய அலுவலகத்தில் பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய அலுவலகம் கட்டுதல், முன்புறம் வணிக வளாகம் அமைத்தல், 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கு பணிகள் தேர்வு செய்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றரை ஆண்டுக்கு முன் செய்யப்பட்ட பல பணிகளுக்கு, தற்போது பல லட்சம் நிதி ஒதுக்கும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள், இனி இதுபோல் நடக்காது என உறுதியளித்ததால், பின்னர் ஒப்புதல் அளித்தனர்.கவுன்சிலர்கள் பேசுகையில், 'ஊராட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களை மதிப்பதில்லை. ஊராட்சியில் நடக்கும் வளர்ச்சி பணிக்கு அழைப்பதில்லை. எந்த திட்டத்திலும் பயனாளிகள் தேர்வு குறித்து தகவல் தெரிவிப்பதில்லை. செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக உள்ளது. ஆனால் நிதி இல்லை' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.'இதுகுறித்து ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்' என, அதிகாரிகள் பதிலளித்தனர். துணை சேர்மன் சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண், தோட்டக்கலை, கால்நடை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.