மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகரில், திருப்பூர் மாநகராட்சி, 4வது குடிநீர் திட்டகுழாய் பதிக்க, இடம் இருக்குமா என்ற சந்தேகம், அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இத்திட்டத்தை, பவானிசாகர் அணையில் இருந்து எடுக்க வலியுறுத்தி, வரும், 4ம் தேதி மேட்டுப்பாளையத்தில் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றில் இருந்து, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், அவிநாசி, திருப்பூர் உட்பட, 17 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. திட்டங்களுக்கு நாளொன்றுக்கு, 10 கோடியே, 60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் கோடைக்காலத்தில், பவானி ஆற்றில், சராசரி நீர்வரத்து, 7 கோடியே, 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வரும் என, நிர்வாக பொறியாளர் அறிவித்துள்ளார்.இந்நிலையில், கோவை மாநகராட்சியின், பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்துக்கு, நாளொன்றுக்கு, 29 கோடியே, 50 லட்சம் லிட்டர் தண்ணீரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது குடிநீர் திட்டத்துக்கு, நாளொன்றுக்கு, 19 கோடியே, 60 லட்சம் லிட்டர் தண்ணீரும், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட உள்ளது.கோவை, திருப்பூர் ஆகிய இரு மாநகராட்சிகளின், குடிநீர் திட்டங்களை நிறைவேற்றினால், பவானி ஆற்றை மட்டுமே நம்பியுள்ள, 17 குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால், பல லட்சம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது குடிநீர் திட்டத்துக்கு, ராட்சத குழாய் பதிக்கும் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.குறுகிய சாலைமேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை அருகே, 6 சாலைகள் ஒன்றாக இணைக்கின்றன. இந்த இடத்தில் போக்குவரத்து போலீஸ் நிழற்குடையும் உள்ளது. இந்த சாலைகள் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. 6 சாலைகளில், அன்னுார் சாலை மிகவும் குறுகியதாக உள்ளது.சாலையின் ஒருபுறம், திருப்பூர் மாநகராட்சியின், இரண்டாவது குடிநீர் திட்ட குழாய், மற்றொரு பக்கம் மேட்டுப்பாளையம் நகரின், பிரதான மற்றும் பகிர்மான குழாய்கள், திருப்பூர் மாநகராட்சியின் முதல் குடிநீர் திட்ட குழாய் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. மேலும், சாலையின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியின், 4வது குடிநீர் திட்டத்திற்கான, ராட்சத குழாய், அன்னுார் சாலையில் பதிக்க இடம் இருக்குமா என்ற சந்தேகம், அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகர மக்கள் கூறியதாவது:மேட்டுப்பாளையம் நகரில், அன்னுார் சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால், திருப்பூர் மாநகராட்சி, குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டும் போது, மேட்டுப்பாளையம் நகராட்சியின் பிரதான மற்றும் பகிர்மான குழாய்கள் உடையும். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் வழங்கும் அதிகாரிகளும், உடனிருந்து, குழாய் உடைப்பை, உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.தீர்மானம்இந்நிலையில், மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கோவை, திருப்பூர் மாநகராட்சிகளின் இரு குடிநீர் திட்டங்களை, பவானிசாகர் அணையில் இருந்து எடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி, வரும் 4ம் தேதி காலை, 6:00 லிருந்து மாலை, 6:00 மணி வரை, மேட்டுப்பாளையம் நகரில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.