மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நேற்று மாலை போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு, ''போராட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை,'' என்றார்.மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே- -அவுட்டில், கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி, காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து, முதலாம் ஆண்டு விளக்கேற்றி அஞ்சலி மற்றும் ஊர்வலம் நடத்த, பல்வேறு அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, மேட்டுப்பாளையத்தில், நேற்று மாலை போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு தலைமையில் நடந்த அணிவகுப்பில், ஏ.டி.எஸ்.பி., அனிதா, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், உட்பட சப்--இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, அதிவிரைவுப்படை, உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படையினர் என, 200க்கும் மேற்பட்டவர்கள், கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.அன்னுார் சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, நடூர், ஈ.எம்.எஸ்., திருமண மண்டபம் வழியாக கோ--ஆப்ரேட்டிவ் காலனியை அடைந்தது. அங்கு, ஆயுதப்படை போலீசார், தடியடி ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு பின், சகஜ நிலை திரும்பி வருகிறது. மக்கள் மத்தியில், பாதுகாப்பு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்று, 10 மாவட்டங்களில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்தில் இன்று (நேற்று) கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பொதுமக்களிடையே, 'உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்' என்ற வகையில், இந்த பேரணி நடந்தது.மேட்டுப்பாளையம் நடூர் சம்பவம் குறித்து, போஸ்டர் ஒட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாதம், 31ம் தேதி வரை, அரசின் ஊரடங்கு விதிமுறைகளின் படி, 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள், போலீசாரின் அனுமதியுடன் நடைபெற வேண்டும். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால், கைது செய்யப்படுவர். மேலும் நடூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டம், ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை.இவ்வாறு, எஸ்.பி., அருளரசு கூறினார்.