பெ.நா.பாளையம்:ஆனைகட்டி சேம்புக்கரை மலைக்கிராமம் அருகே உள்ள தடுப்பணையில், மழைநீர் நிறைந்துள்ளது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சி சேம்புக்கரை, துாமனுார், காட்டுச்சாளை உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, அவரை, துவரை ஆகியன முக்கிய பயிர்களாக பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், இப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன.இங்குள்ள சேம்புக்கரையில் உள்ள தடுப்பணையில் நீர் நிறைந்து வழிந்தோடுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள திறந்தவெளிக்கிணற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தவிர, குடிநீருக்கான சுனையில் இருந்தும், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பழங்குடியின மக்களின் தண்ணீர் தேவை நிறைவு பெற்றுள்ளது. மேலும், கடந்த மாதம் காட்டுசாளை கிராமத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தொகுதி நிதியான ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து, பைப் அமைத்து, மலைக்கிராம மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் பணி நேற்று துவங்கியது.இதுகுறித்து, சேம்புக்கரை கிராம மக்கள் கூறியதாவது:துாமனுார், சேம்புக்கரை, காட்டுசாளை உட்பட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகம். பெரும்பாலும், தண்ணீர் தேடி மலைக்கிராமத்துக்கு வருகின்றன. மழையால், சேம்புக்கரை தடுப்பணையில், தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால், காட்டுயானைகள் மலைக்கிராமத்தை நோக்கி வருவது தடுக்கப்படும். மேலும், பழங்குடியின மக்களின், கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையும் தீரும் சூழல் உருவாகியுள்ளது. இது போல மேலும் சில நாட்கள் மழை பெய்தால், ஒட்டுமொத்த விவசாயம் செழிக்கும். கால்நடைகளுக்கும் பசுந்தீவனங்கள் கிடைக்கும்.