புதுச்சேரி; ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார்,56; இவர் முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் கடந்த 2014ம் ஆண்டு நியூவெல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கி வீட்டு உபயோக பொருட்கள், சுகாதார பொருட்கள் விற்பனை செய்து வந்தார். தொடர்ந்து, 2016 ம் ஆண்டு முதலீட்டு நிறுவனம் துவங்கி ஏலச்சீட்டு நடத்தினார். அதில் பலரும் சீட்டு கட்டி வந்தனர்.இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி முதலீட்டு நிறுவனம் திடீரென மூடப்பட்டது. பொதுமக்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜூன் 8 ம் தேதி திறக்கப்படும். முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப பணம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் முதலீட்டு நிறுவனம் திறக்கப்படவில்லை. சஞ்சய்குமார் தலைமறைவானார். இதனை அறிந்த பொதுமக்கள், இதுகுறித்து டி.ஜி.பி.,யிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள சஞ்சய்குமாரின் உறவினர் அடகு கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் முத்தியால்பேட்டை போலீசார், அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.