கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி, தாமரை ஏரியில் இருந்து, மற்ற ஏரிகளுக்கு செல்லும் உபரி நீர் கால்வாய், ஜி.என்.டி., சாலை ஓரமாக உள்ளது.அதன் பெரும் பகுதி துார்ந்து போனதுடன், தனியார் சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் நிறுவி உள்ளனர். இதனால், கால்வாய் வழியாக உபரி நீர் செல்லாமல், சாலையில் பாய்ந்து வீணாகியது.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமையில், பேரூராட்சி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை சார்ந்த அலுவலர்கள், கால்வாய் அமைந்துள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.அதை தொடர்ந்து, கால்வாயை துார் எடுத்து, விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய் பகுதியை, வருவாய் துறை மூலம் கண்டறிந்து, கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.