ஊத்துக்கோட்டை; தற்காலிக தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாலம் வழியாக செல்ல தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஆரணி ஆற்றின் நடுவே, பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு, 32 அடி நீர்மட்டம் உள்ளது. இதன் உபரி நீர் திறந்து விட்டால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.இதில், ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கி, பல நாட்கள் போக்குவரத்து நிறுத்துவதால், அனந்தேரி, பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அத்தியாவசியத் தேவைக்கு, ஊத்துக்கோட்டை வர முடியாத நிலை ஏற்படும்.ஊத்துக்கோட்டையில் இருந்து, திருவள்ளூர் செல்ல, 40 கி.மீட்டர் துாரம், பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர் வழியாக சுற்றி செல்ல வேண்டும்.கடந்த, 2018ம் ஆண்டு, பாலம் கட்ட, 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள், 70 சதவீதம் முடிந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பணிகள் பாதித்தது. வாகனங்கள் செல்ல, ஆரணி ஆற்றின் மேல் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. 'நிவர்' புயலால் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் இரண்டு இடங்களில் உடைந்தது. கடந்த, 25ம் தேதியில் இருந்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், போந்தவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஊத்துக்கோட்டை வர அவதிப்பட்டனர்.தண்ணீர் குறைந்ததால், கட்டி முடிக்காத பாலத்தில் செல்ல, ஏணி மூலம் ஏறிச் செல்கின்றனர். எனவே, பாலத்தின் மேல் செல்ல இரண்டு பக்கமும் தற்காலிக சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.