திருத்தணி; கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் பாதை, சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், காலணிகளை கையில் எடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.திருத்தணி ஒன்றியம், மத்துார் ஊராட்சியில், கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்திற்கு, மத்துார், மூலமத்துார், கொத்துார் ஆகிய கிராமங்களில் இருந்து, விவசாயிகள் கால்நடைகளை சிகிச்சைக்காக, தினசரி ஓட்டி வருகின்றனர்.இந்நிலையில், கால்நடை மருந்தகம் உள்ள இடத்திற்கு, திருத்தணி - மத்துார் செல்லும் தார்ச்சாலையில் இருந்து அரை கி.மீ., மீட்டர் செல்ல வேண்டும். கால்நடை மருந்தகத்திற்கு இதுவரை ஊராட்சி நிர்வாகத்தால் சாலை அமைக்கப்படவில்லை.இதனால், கால்நடை மருந்தகத்திற்கு செல்லும் பாதை, மழை பெய்தால், தண்ணீர் தேங்கியும், சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.இதனால் சிகிச்சைக்காக, கால்நடைகள் ஓட்டி வரும் விவசாயிகள், மருத்துவர் மற்றும் ஊழியர்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.நேற்று, ஆய்வுக்காக சென்ற உதவி இயக்குனர், சேறும், சகதியுமாக இருந்ததால், காலணிகளை கழற்றி கையில் எடுத்துக் கொண்டு மருந்தகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.எனவே, இனியாவது, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்நடை மருந்தகத்திற்கு தார் அல்லது சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.