போரூர்; தீபாவளி சீட்டு நடத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.போரூர் சிக்னல் அருகே, மனோஜ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு, மாதம்தோறும், 500 - 1,500 ரூபாய் வரை, தீபாவளி நகை சீட்டு நடத்தப்பட்டது.இதில், ௧,௦௦௦க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டினர். ஒவ்வொருவரும், 5 - 10 சீட்டு வரை கட்டியுள்ளனர்.கட்டிய தொகைக்கு ஏற்ப, நகை மற்றும் வெள்ளி பொருட்கள், தீபாவளி பண்டிகைக்கு முன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், சில வாரங்களாக நகைக்கடை மூடிய நிலையில் உள்ளது. உரிமையாளரின் வீடும் பூட்டப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வாடிக்கையாளர்கள், அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து, போரூர் போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, போரூர் மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.இதனால், போரூர் - ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வளசரவாக்கம் போலீசார், நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.