கொடுங்கையூர்; மாநகராட்சிக்கு சொந்தமான தெருவையே வளைத்து போட்டதாக கூறப்படும் தனி நபர் ஒருவர், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவரின் இடத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 37வது வார்டில், கொடுங்கையூர் குப்பை கிடங்கு உள்ளது.இதன் எதிரே, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் உள்ள, முதல் குறுக்கு தெருவான, 20 அடி சாலையை, தனி நபர் ஒருவர்ஆக்கிரமித்து, கடை, குடோன் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது, இப்பகுதியில் அமைந்திருக்கும், ஒன்று முதல், ஆறு வரையிலான மனைகளுக்கான குறுக்கு தெருவாகும். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருக்கும் இத்தெருவை மீட்க, அப்பகுதியைச் சேர்ந்தோர் போராடி வருகின்றனர்.இது குறித்து, மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை எனக், கூறப்படுகிறது.அதே பகுதியில், தண்டையார்பேட்டை, கார்ப்பரேஷன் காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரான ராமசாமி, 76, என்பவர், ஒன்று மற்றும் ஐந்து ஆகிய எண் உடைய மனைகளை வாங்கியுள்ளார். இதன் மொத்த பரப்பு, 6,537 சதுர அடியாகும்.கடந்த, 1982ல், மத்திய பிரதேசத்தில் வேலை பார்த்த போது, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷகிலா பானு என்பவரிடம், 21 ஆயிரத்து, 760 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இவர், மனைக்கான வழியும் ஆக்கிரமிக்கப்பட்ட சாலையில் தான் உள்ளது. பணி சூழல் காரணமாக, இவ்விடத்தை கவனிக்க முடியவில்லை.காலப்போக்கில், மாநகராட்சி தெருவை ஆக்கிரமித்திருந்த நபர், ராமசாமியின் இடத்தில், 2,000 சதுர அடிக்கும் அதிகமான இடத்தை ஆக்கிரமித்து, வீடுகள், கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.இது குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில், மன உளைச்சலுக்கு ஆளான ராமசாமி, 2019, பிப்., 22ம் தேதி உயிரிழந்தார்.அவருக்கு, ராஜேஸ்வரி, 63, என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள், தங்கள் நிலத்தை மீட்க, படாதபாடுபட்டு வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள்கவனித்து, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, முதல் குறுக்கு தெரு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும். உறுதியாகும் பட்சத்தில்,தெருவை மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தனிநபர் ஒருவர், ஆறு மனைகளுக்கான, மாநகராட்சியின் பொது வழியையும், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரின் இடத்தையும் ஆக்கிரமித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு குறித்த தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பிட்ட இடத்தில், இன்று ஆய்வு செய்யப்படும். ஆக்கிரமிப்பு இருப்பது உறுதியால், அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.