கொரட்டூர்; கொரட்டூர் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறும், கலங்கல் அருகே, பழைய கட்டுமான கரை உறுதியிழந்து சேதமடைந்துஉள்ளதால், அதிகரிக்கும் தண்ணீரின் வேகத்தால், கரை உடையும் ஆபத்து உள்ளது.சென்னை, அம்பத்துார் மண்டலத்தில், 950 ஏக்கர் பரப்புடைய கொரட்டூர் ஏரி, தனியாரின் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி, 600 ஏக்கர் தான் மிஞ்சி உள்ளது.நீர்க்கசிவுதுார் வாரப்படாத நிலையில், சமீபத்திய மழை மற்றும் அம்பத்துார் ஏரியில் இருந்து கிடைத்த உபரி நீரால், ஏரி நிரம்பி உள்ளது. இந்த ஏரியில் இருந்து, கடந்த சில தினங்களாக, உபரி நீர் வெளியேறி பொதுப்பணித் துறை கால்வாய் வழியாக, ரெட்டேரிக்கு பாய்கிறது.இந்த நிலையில், மாதனாங்குப்பம் அருகே உள்ள, ஏரி கலங்கலின் பழைய கட்டுமானத்தின் இரு பக்கமும், பராமரிப்பின்றி உறுதியிழந்து, சேதமடைந்துள்ளது. அதன் வழியாகவும், வேகமான நீர்க்கசிவு நீடிக்கிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரின் வேகத்தால், சேதமடைந்த இடம் மேலும் பலவீனமாகி வருகிறது.இன்று முதல், இம்மாதம், 3ம் தேதி வரை பலத்த மழை நீடிக்கும் என, வானிலை ஆராய்ச்சி அறிவித்துள்ளது. அப்போது, ஏரிக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால், உறுதியிழந்த கலங்கல், மேலும் சேதம்அடைந்து, ஏரி கரை உடையும் ஆபத்து உள்ளது.அபாயகர நிலைஅதற்கு முன், சேதம்அடைந்த கலங்கல் பகுதியை சீரமைக்க, பொதுப்பணித் துறையினர் முன் வர வேண்டும். ஏரியின் அபாயகர நிலையை உணராமல், சுற்றுவட்டாரங்களை சேர்ந்தோர், அதில் இருந்து வெளியேறும் உபரி நீரில், மீன் பிடிக்கவும், கலங்கல் அருகே குளித்தும் விளையாடுகின்றனர்.அசம்பாவிதங்களை தவிர்க்க, பொதுப்பணித்துறையும், கொரட்டூர் போலீசாரும், இங்கு கண்காணிப்பு பணியை மேற்கொள்வது நலம்.