சேலம்: வரும், 7 முதல், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், சேலம் மாவட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருக்கும், கொரோனா மருத்துவ மையங்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக, கடந்த மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பிய நிலையில், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் ஆடிட்டோரியங்கள் உள்ளிட்டவை தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றப்பட்டன. சேலம் மாவட்டத்தில், 16 இடங்களில் மருத்துவ மையங்கள் உள்ளன.
அவற்றின் விபரம்: (அடைப்புக்குள் படுக்கை வசதி) பெரியார் பல்கலை, கருப்பூர் மாணவியர் விடுதி, கோரிமேடு மகளிர் கலைக்கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, இடைப்பாடி அரசு கல்லூரி, வைஸ்யா கல்லூரி, மேச்சேரி காவேரி இன்ஜினியரிங் கல்லூரி, மகுடஞ்சாவடி நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட், சிவராஜ் சித்தா மெடிக்கல் கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் மருத்துவ மையங்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தில், நாளுக்கு நாள் குறைந்து வரும் கொரோனா தொற்று காரணமாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுதல், சிகிச்சை பெற்று கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் முன்வருவதாலும், மருத்துவமனையில், உள் நோயாளிகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா பிரிவில், 60 சதவீத படுக்கைகளுக்கும் மேல் காலியாக உள்ளது. வரும், 7 ம் தேதி கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மையங்கள், வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவமனையில், படுக்கைகள் காலியாக இருப்பதால், தற்காலிக மருத்துவ மையங்களில் நோயாளிகள் அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், திடீரென நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சமாளிக்கும் வகையில், அவை தயார் நிலையிலேயே உள்ளன. கல்லூரிகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதால், கலெக்டர் நடவடிக்கையின் பேரில், மாற்று இடத்தில் அவை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.