வாழப்பாடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை அடித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, புதுப்பாளையம் வழியாக செல்லும் புறவழிச்சாலை மேம்பாலத்தின் கீழ், நேற்று முன்தினம் ஆண் உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சேலம் எஸ்.பி., தீபாகானிகேர் தலைமையிலான போலீசார், எரிக்கப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சக்திவேல், 25, சில ஆண்டுகளாக வாழப்பாடி, மன்னநாயக்கன்பட்டியில் வசிக்கும் அவரது அக்கா சத்யா வீட்டில் தங்கியிருந்தார். அக்கா கணவர் வசந்தகுமார் நடத்தி வரும், பாக்கெட் பால் விற்பனையில், சக்திவேலும் ஈடுபட்டு வந்தார். புதுப்பாளையம் பாலத்தின் கீழ், இவரது உடலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், வாழப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் திருமலை, 20, மற்றும், 17 வயது சிறுவன் ஆகியோருடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டு, அடிக்கடி மது அருந்தி வந்துள்ளனர். இவர்களை, வாழப்பாடி போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று முத்தம்பட்டி வி.ஏ.ஓ., கலைச்செல்வியிடம் இருவரும் சரணடைந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், 'கடந்த, 27ல், இரவு வழக்கமாக மது அருந்தும்போது, சக்திவேல், தன் (திருமலை) குடும்பத்தினரை திட்டும்போது தகராறு ஏற்பட்டது. சக்திவேல், எங்களது இருவரையும் தாக்கியதால், அவரது தலையில் பெரிய கல்லை போட்டு கொலை செய்தோம். பின், சீமை கருவேல மரங்களை போட்டு, உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தோம்' என்று கூறியுள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், திருமலை மற்றும், 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.