நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அனைத்து போலீசார் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. தமிழக சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் நடந்து வருகிறது. கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா உத்தரவுக்கிணங்க, சேலம் சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார், நாமக்கல் மாவட்ட எஸ்.பி., சக்தி கணேசன் அறிவுரையின்படி நேற்று காலை, 9:00 மணிக்கு நாமக்கல் பூங்கா சாலையில், கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராடுவது, சட்ட ஒழுங்கு பிரச்னையின் போது போலீஸ் துறையால் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் மற்றும் யுக்திகள், பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்படுவது ஆகியவை குறித்து போலீஸ் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் நிகழ்ச்சி துவங்கியது. ஏ.டி.எஸ்.பி., ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலமானது, மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை, பிரதான சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் பூங்கா சாலையில் நிறைவடைந்தது. மேலும் கலவரத்தை அடக்கும் முறை, தீயணைப்புத்துறையுடன் சேர்ந்து பேரிடர் மீட்பு பணி, அவரசர கால சிகிச்சை உள்ளிட்ட ஒத்திகை நடத்தப்பட்டது. அதில் மாவட்டம் முழுவதும் இருந்து டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் ஊர்காவல்படையினர் பங்கேற்றனர்.