மேட்டூர்: ''சர்க்காரியா கமிஷன் அறிக்கையை படித்திருந்தால், உதயநிதி இப்படி பேசியிருக்கமாட்டார். கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிய மாட்டார்,'' என, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., செம்மலை கூறினார்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கிய, மேட்டூர், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., செம்மலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அமைச்சர்களின், ஊழல் பட்டியலை வெளியிட்டு விடுவேனோ என்ற பயத்தில், அ.தி.மு.க., அரசு தன்னை கைது செய்வதாக, தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறுகிறார். 1971 முதல், 75 வரையிலான, தி.மு.க., ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மாஸ்டர் ரோல் ஊழல், நிலத்திலுள்ள பயிர்களுக்கு விமானத்தில் சென்று, மருந்து தெளித்ததாக பொய் கணக்கு எழுதிய ஊழல் என, எத்தனையோ நடந்துள்ளது. அதை நீதிபதி சர்க்காரியா , தன் அறிக்கையில் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். தி.மு.க., மத்திய அமைச்சர்கள் செய்த, 2 ஜி ஊழல், கலைஞர் 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் சி.பி.ஐ., வசம் ஆதாரத்துடன் உள்ளது. சர்க்காரியா கமிஷன் அறிக்கையை படித்திருந்தால் உதயநிதி இப்படி பேச மாட்டார். கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிய மாட்டார். தி.மு.க.,- எம்.பி., கனிமொழி இடைப்பாடி தொகுதியில், அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை பிடிக்க முடியாது. சேலம் மாவட்டத்தில், 100 ஏரிகள் பாசன வசதி பெறுவதற்காக, உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். நீர் மேலாண்மை, விவசாயம் பற்றி கனிமொழிக்கு என்ன தெரியும். அவர் தலை மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தியான, 2ஜி ஊழல் மேல்முறையீடு வழக்கில் கவனம் செலுத்துவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.