இடைப்பாடி: தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி, இடைப்பாடி வந்தபோது, போலீசாரின் அனுமதியின்றி ஒலிபெருக்கி வைத்த, நகர செயலர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., மகளிர் அணி செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி, நேற்று முன்தினம் இடைப்பாடி சட்டசபை தொகுதியின், பல்வேறு இடங்களில் பரப்புரை தொடங்கினார். பஸ் ஸ்டாண்டுக்கு இரவு நேரத்தில் வந்த கனிமொழிக்கு, தி.மு.க.,வினர் வரவேற்பு கொடுத்தனர். இங்கு கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என, தி.மு.க.,வினர் மனு கொடுத்திருந்தனர். ஆனால், கூட்டம் நடத்தவோ, ஒலிபெருக்கி வைக்கவோ போலீசார் அனுமதி தரவில்லை. ஆனாலும், அனுமதியை மீறி, தி.மு.க.,வினர் ஒலிபெருக்கி வைத்து இருந்தனர். கனிமொழியும் அக்கூட்டத்தில் பேசினார். இந்நிலையில், ஒலிபெருக்கி வைத்ததற்கும், கூட்ட ஏற்பாடுகளை செய்ததற்கும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒலிபெருக்கி வைத்தது குறித்து, நகராட்சி ஆணையாளர் முருகன் கொடுத்த புகாரையடுத்து, ஒலிபெருக்கி வைத்த உரிமையாளர் நடராஜன் மீதும், கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு உள்ள நேரத்தில், அனுமதியின்றி கூட்டம் ஏற்பாடு செய்த, தி.மு.க., நகர செயலர் பாஷா உள்ளிட்ட பலர் மீதும் இடைப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஒலிபெருக்கிக்கு பயன்படுத்திய, நான்கு ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.