கோவை : கர்நாடகா, டில்லியில் இருந்து கார்களை திருடிய இரு பட்டதாரிகள் உட்பட மூவர் சிக்கினர். 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 கார்கள் மீட்கப்பட்டன.
கோவை, மதுக்கரையை அடுத்த அரிசிபாளையத்தில் பதிவு எண் இல்லாத காரை பறிமுதல் செய்த போலீசார் அரிவாள், பட்டாக்கத்தி, கயிறு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். காரிலிருந்த துாத்துக்குடி, குலசேகரநல்லுார் தெற்கு தெருவை சேர்ந்த, சுரேந்திரன், 23, பி.பி.ஏ., பட்டதாரி; திருநெல்வேலி நாங்குநேரி, கல்மாணிக்கபுரம் வடக்கு வீதியை சேர்ந்த, விஜயராஜ், 23; மதுக்கரை மார்கெட் ரோடு குரும்பபாளையம் ரோட்டை சேர்ந்த சக்தி, 22, பி.எஸ்.சி., பட்டதாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய, ஆட்டோ கேரேஜ் நடத்தி வரும், சாதிக், இம்ரான் மற்றும் ஓட்டல் நடத்தி வரும் தினேஷ் ஆகியோரை தேடுகின்றனர்.
கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு கூறியதாவது:
கைதான மூவரும், தப்பி ஓடியவர்களுடன் சேர்ந்து கர்நாடகா, டில்லி உள்ளிட்ட இடங்களிலிருந்து, 'செல்ப் டிரைவிங்' கார்களை வாடகைக்கு எடுத்து, அதில் உள்ள ஜி.பி.எஸ்., கருவியை துண்டித்து விடுவர். போலி ஆர்.சி., புக் தயார் செய்து விற்று விடுவர். உதிரிபாகங்களையும் கழற்றி விற்பர். இவர்களிடமிருந்து, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 கார்கள் மீட்கப்பட்டன. இவற்றில், ஆறு கார்களை காணவில்லை என, கர்நாடகா போலீசில் புகார் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தனிப்படையினருக்கு, எஸ்.பி., பாராட்டு தெரிவித்தார்.