கடலுார் : கடலுார் அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,எப்போது நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த கடலுாரில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், அக்னீஸ்வரர் - சொக்கநாயகி அம்மன் கோவில் உள்ளது.பல நுாற்றாண்டுகள் பழமையான இக்கோவிலில், பஞ்ச கோஷ்டம், மகாமண்டபம், சொக்கநாயகி, ஆறுமுகர் சன்னிதிகள் உள்ளன.கோவிலை, சூணாம்பேடு ஜமீன் பரம்பரையினர், அறங்காவலராக நிர்வகிக்கும் சூழலில், நீண்டகாலம் பராமரிக்கப்படாமல் சீரழிந்தது.இதன், பல நுாறு ஏக்கர் விவசாய நிலத்தை, குத்தகைக்கு எடுத்தவர்களும், முறையாக குத்தகைசெலுத்தவில்லை என, கூறப்படுகிறது.
இது குறித்து, சில ஆண்டுகளுக்கு முன், நம் நாளிதழில், செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, அறங்காவலர் தரப்பில், கோவிலில் புனரமைப்பு பணி துவக்கி, ஓராண்டிற்கு முன் புதுப்பிக்கப்பட்டது.இறுதிகட்ட, பிற பணிகள் முடியாமல், கும்பாபிஷேகமும் தாமதமாகிறது.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கோவில் நிலத்தை, குத்தகைக்கு பெற்றுள்ள பிரமுகர்கள், சொந்த நிலம் போன்றே, நீண்டகாலம் அனுபவிக்கின்றனர்.கோவில் கும்பாபிஷேகம்நடந்து வழிபட்டால், குத்தகை நிலம் பறிபோகலாம் என்பதால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஜமீன் பரம்பரையினர் புதுப்பிக்கின்றனர். கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.