ஸ்ரீபெரும்புதுார் : படப்பை, பஜார் வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள பஜார் வீதியில் கழிவு நீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.இது குறித்து, படப்பை மக்கள் கூறியதாவது:படப்பை, பஜார் வீதியில், 1,000க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு, சுற்றியுள்ள, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் வந்து, அத்தியாவசிய தேவை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், ஓராண்டாக, படப்பை பஜார் வீதியில், கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து, படப்பையில் அமைந்துள்ள குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம், 100க்கும் மேற்பட்ட புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.கழிவு நீரால் மிக அவதிக்கு உள்ளாகிறோம். காஞ்சிபுரம் கலெக்டர், இந்த பிரச்னையை சரிசெய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.