காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கிராமப்புற குளங்களில், 992 குளங்கள், 100 சதவீதம் நிரம்பின.
வடகிழக்கு பருவ மழை துவங்கியதில் இருந்தே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இயல்பாக பெய்ய வேண்டிய மழை, ஓரளவிற்கு செய்தபடியே இருந்தது. இதற்கிடையே, 'நிவர்' புயல் காரணமாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால், ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதி, செய்யாறு, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஏரிகளை தவிர, ஏராளமான குளங்கள் நிரம்பி உள்ளன.
கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள் குறித்து, ஊரக வளர்ச்சித் துறையினர், அறிக்கையாக தயாரித்து வருகின்றனர்.அவர்கள் கணக்கெடுப்பின்படி, காஞ்சி புரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், குன்றத்துார் என, ஐந்து ஒன்றியங்களில், மொத்தமுள்ள, 2,112 குளங்களில், 992 குளங்கள், 100 சதவீதம் நிரம்பியுள்ளன.தவிர, 559 குளங்கள், 50 சதவீதம், 561 குளங்கள் 75 சதவீதம் என்ற அளவில் தண்ணீர் இருப்பதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.