பொன்னேரி : ஐந்து ஆண்டுகளாக நீர்வரத்து இன்றி இருந்த தடப்பெரும்பாக்கம் ஏரி, தொடர் மழையால், நீர் நிரம்பியுள்ளது.
பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பாசன ஏரி, 163 ஏக்கர் பரப்பு கொண்டது. பலத்த மழையினால், 2015ல், இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின், நீர்வரத்து இன்றி இருந்ததுடன், ஏரியில் மணல் திருட்டும் தொடர்ந்தது.இந்நிலையில், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான ஏரிகள், முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அதில், தடப்பெரும்பாக்கம் ஏரிக்கும், நீர்வரத்து அதிகரித்து, முழுமையாக நிரம்பி, கலங்கல் வழியாக, உபரி நீர் வெளியேறி கொண்டிருக்கிறது.
உபரி நீர், சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள விளை நிலங்கள் வழியாக அனுப்பம்பட்டு ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.ஏரி, 100 சதவீதம் நிரம்பி உள்ள நிலையில், 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று உள்ளன. ஏரியின் அருகில் உள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஏரியில் தண்ணீர் தேங்கியிருப்பதை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.