பொன்னேரி : தொடர் மழையால், நீர் நிரம்பியுள்ள பாசன ஏரியின் கரைகள் அரித்து வருவதால், உடையும் அபாயத்தால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பொன்னேரி அடுத்த, பெரிய கரும்பூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரி, 400 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாட்டிற்கும், பயன்படுகிறது.நீர் நிரம்பிய ஏரியின் கரைகள் சமீபத்தில் பலப்படுத்தப்பட்டது. ஏரியில், நீர் இன்றி வறண்டு கிடந்தபோது, கரைகளை ஒட்டியிருந்த பகுதிகளில், தொடர்ந்து மணல் கொள்ளை நடந்தது.தொடர் மழை மற்றும் பல்வேறு பகுதிகளின் நீர்வரத்து காரணமாக, ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது.
கரை சீரமைப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத நிலையில், கரைகள் பலவீனம் அடைந்து இருப்பதாகவும், அவை உடையும் நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கரை சீரமைப்பு பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டதால், அவை, மழை நீரில் கரைந்து உள்ளன. ஏரியின் கரைகள் உடைந்து, அருகில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மூழ்கும் நிலை உள்ளது.மேற்கண்ட ஏரியில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.மேற்கண்ட ஏரியின் கரைகள் பலமாக இருப்பதால் உடைவதற்கு வாய்ப்பில்லை எனவும், விவசாயிகள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பொதுப்பணித் துறையினர் தெரிவித்து உள்ளனர்.