திருத்தணி : திருத்தணி கல்வி மாவட்டத்தில், சிறந்த முறையில் செயல்பட்ட அரசினர் மகளிர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு கல்வி மாவட்டத்திற்கு, ஒரு பள்ளி தேர்வு செய்து, அந்த பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் அறிவித்தது.அந்த வகையில், 2019-20ம் கல்வியாண்டில், திருத்தணி கல்வி மாவட்டத்திலேயே, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சிறப்பாக செயல்பட்டது.அந்த வகையில், பள்ளியில், குடிநீர் வசதி ஏற்படுத்தியும், கழிப்பறை கட்டுதல் மற்றும் பழுது பார்த்தல், வகுப்பறைக் கட்டடம் பழுது பார்த்தல் ஆகிய பணிகள் சிறப்பாக செய்துள்ளது.
இதனால், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் திருவளர்செல்வி பரிசு தொகைக்கான காசோலையை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வியிடம் வழங்கினார்.அதை தொடர்ந்து, இந்த காசோலையை, முதன்மை கல்வி அலுவலர், திருத்தணி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் டி.தெமினா கிரோனப் இடம் வழங்கினார்.