உத்திரமேரூர் : உத்திரமேரூர் பேரூராட்சி, மல்லியங்கரணையில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடைக்கு, மின் இணைப்பு வழங்காததால், ஆபத்தான முறையில், கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சி, 9வது வார்டு, மல்லியங்கரணையில், 2018 - 19 நிதியாண்டில், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 9.22 லட்சம் ரூபாய் செலவில், புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.கடை திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், ரேஷன் கடைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால், மின்னணு தராசை பயன்படுத்துவதிலும், சிக்கல் ஏற்பட்டதோடு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இருட்டில் பொருட்கள் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், ரேஷன் கடை அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து, கொக்கி போட்டு மின்சாரம் திருடி, ரேஷன் கடைக்கு மின்சாரம் பெறப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.ஆபத்தான முறையில், கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவதால், காற்றடிக்கும் போது, முறையாக இணைக்கப்படாத கொக்கி போட்ட ஒயர் கீழே விழுந்து, ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர், மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மல்லியங்கரணை ரேஷன் கடைக்கு, மின் இணைப்பு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.