ஊத்துக்கோட்டை : பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 67 ஏரிகளில், 31 ஏரிகள் முழுதும் நிரம்பி, கலங்கல்வழியாக, தண்ணீர் வெளியேறுகிறது.
பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறையில், ஊத்துக்கோட்டை பாசன பிரிவு அலுவலகம் சார்பில், முறைபடுத்தப்பட்ட ஏரிகள், 15, முறைபடுத்தப்படாத ஏரிகள், 52, என, மொத்தம், 67 ஏரிகள் உள்ளன.இதில், முறைபடுத்தப்பட்ட ஏரிகளான ஊத்துக்கோட்டை, பேரண்டூர், லட்சிவாக்கம், பாலவாக்கம், செங்கரை, முக்கரம்பாக்கம் வரை, 15 ஏரிகளுக்கு, சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, நீர்வரத்துக் கால்வாய் மூலம் செல்கிறது.மீதமுள்ள, முறைபடுத்தப்படாத, 52 ஏரிகளுக்கு, வட கிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் நீர்வரத்து ஏற்பட்டது.
இதில், டி.பி.புரம், அல்லிக்குழி, வெள்ளாத்துார், ஊத்துக்கோட்டை, கூனிப்பாளையம், பென்னலுார் பேட்டை உள்ளிட்ட, 31 ஏரிகள் முழுதும் தனது முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, இந்த ஏரிகளில் கலங்கல்வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது.இதுகுறித்து உதவி பொறியாளர் பிரிதிவிபாலசுந்தரம் கூறியதாவது:தற்போது பெய்த மழையால், 31 ஏரிகள் முழுதும் நிரம்பி உள்ளது. போதுமான அளவு மழை இல்லாததால், மீதமுள்ள, 21 ஏரிகளுக்கு ஓரளவிற்கு மட்டும் தண்ணீர் உள்ளது.சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து செல்லும் நீரால், 15 ஏரிகள் விரைவில் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.