கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
கடந்த வாரம் பெய்த கன மழையின் போது, சிப்காட் வளாகத்தின் பல இடங்களில், மழை நீர் வெளியேற வழியின்றி அப்படியே சாலையில் தேங்கி நின்றன.சிப்காட் சாலைகளை ஒட்டி கழிவு நீர் கால்வாய் அமைந்துள்ளதால், தாழ்வாக உள்ள பல இடங்களில், கழிவு நீருடன், மழை நீர் கலந்து, சாலையில் குளம் போல் தேங்கியுள்ளன.ஒரு வாரமாக தேங்கியுள்ள தண்ணீர் அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி, மழை நீர் சாலையில், தேங்காதபடி, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.