பொன்னேரி : பழவேற்காடு ஏரி வழியாக வெளியேறிய கடல் நீர், கள்ளூர் கிராமத்திற்குள் புகுந்ததால், பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் பாதித்து, அழுகும் நிலையில் உள்ளன.
பொன்னேரி அடுத்த, கள்ளூர் கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பில், நெல் பயிரிடப்பட்டு உள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து வரும் மழை நீர் கால்வாய் ஒன்று, கள்ளூர் கிராமத்தின் அருகில் உள்ள பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் சென்று முடிகிறது.மழை காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர், இந்த கால்வாய் வழியாக, பழவேற்காடு ஏரி மூலம் கடலுக்கு செல்லும். அதே சமயம், பழவேற்காடு ஏரியிலும், கடல் நீர், பல்வேறு பகுதிகளின் கால்வாய் மற்றும் ஆறுகள் மூலம் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
ஏரியில் உள்ள கடல் நீரானது, அதே கால்வாய் வழியாக பின் நோக்கி பயணித்து, கள்ளூர் கிராமத்தினுள் புகுந்து, விளைநிலங்களை சூழ்ந்து, நெற்பயிர்களை மூழ்கடித்து உள்ளது. விளைநிலங்களில் தேங்கியுள்ள உவர்ப்பு நீர் வடிந்தாலும், நெற்பயிர்கள் மீண்டும் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என, விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் கால்வாய் வழியாக விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தடுப்பு சுவர் அமையாத நிலையில், நெற்பயிர்கள் உவர்ப்பு நீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் நேரில், பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.